தமிழ் தாயின் கனவு

12:19 AM

எதுகை மோனை யான் அறியேன்
குறட்பா வெண்பாவும் நான் அறியேன்
இலக்கண கோட்பாடில்லா உன் மழலைதான்
இனிமையென்று மட்டும் நான் அறிவேன்

தத்தி நடக்கையிலும் தடுக்கி விழுகையிலும்
தாய் தமிழில் அம்மா என்கையில்
அல்லி மலர் தளிர் மேனியிலும்
அகிலத்தை எதிர்க்க சக்தி வருகுதைய்யா

ஆங்கிலம் நான் அறியாததும் அல்ல
ஆங்கிலத்துக்கு நான் எதிரியும் அல்ல
அன்னம் இடாது என்பவர்க்கும் கூட
அந்நியோன்யம் தர தாய்மொழி வேண்டுமாம்

அப்படி இருக்க, தாய்மொழி நீ
அறிய உனக்கு உரிமை உண்டு!
கற்று கொடுப்பது உன் தாய்க்கு
கடமை! நான் தவறேன் கண்ணே!

கலைகள் பல நீயாள வேண்டுமென்ற
கனவு காணும் காலம் போய்
கன்னித்தமிழ் நீ ஆள வேண்டுமென்ற
கனவு வந்ததே நான் என்செய்வேன்!

பன்னிரு மொழி கற்ற போதும்
ஈன்றவளுக்கு அவள் மொழியில், கோல்
ஊன்றும் போது நீ கூறும் ஆறுதலே
ஆன்மாவின் அமைதிக்கு வழி கண்ணே!